

புதுச்சேரியில் வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வீட்டை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர்.
நிலுவையில் உள்ள சம்பளம், பி எஃப், இ. எஸ். ஐ-க்கான அடையாள அட்டை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் தங்களை வேலை வாங்குவதாக தனியார் நிறுவனம் மீது குற்றம் சாட்டி வருகின்றனர்.
புதுச்சேரியில் தனியார் நிறுவனம் மூலம் நகர மற்றும் கிராமப்புறங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் சுமார் 600-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர், இவர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் தூய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்யப்படும் பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ அடையாள அட்டைகளும் மற்றும் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் வேலை வாங்குவதாக தூய்மை பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த நிலையில், நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் அவரது இல்லத்தின் முன்பு ஒன்று திரண்ட தூய்மை பணியாளர்கள், அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர்.
இதனை கேட்டுக் கொண்ட அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தனியார் நிறுவனத்துடன் பேசி சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்திரவாதம் அளித்தார்.

இது குறித்து தூய்மை பணியாளர்கள் கூறும்போது…
மாதத்தில் எவ்வளவு சம்பளம் என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம், 6 ஆயிரம் என்று வருகிறது. நிலையான சம்பளம் இல்லை. எனவே எங்களுக்கு சம்பளம் எவ்வளவு என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்கள், இரண்டு வருடங்களுக்கு மேல் பி.எப் பிடிக்கப்படுகிறது. ஆனால் அதற்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை, நாங்கள் தூய்மை செய்தால்தான் நகரமே தூய்மையாக இருக்கும். எனவே தங்களுடைய சிரமங்களை கருத்தில் கொண்டு உடனடியாக நிலுவையில் உள்ள சம்பளத்தையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

