• Thu. May 21st, 2026
WhatsAppImage2026-05-15at0006252
previous arrow
next arrow
Read Now

தகவல் சட்டத்தின் படி தகவல் வழங்காத தேனி மாவட்ட கல்வி அலுவலருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..,

ByKalamegam Viswanathan

May 21, 2026

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்ட தகவலுக்கு உரிய தகவலை வழங்காத தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை உதவி திட்ட அலுவலருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

மதுரை மாநகர் சத்திய சாய் நகர் ரோஜா தெருவை சேர்ந்தவர் ஆர்டிஐ ஆர்வலரும் மற்றும் இந்தியன் குரல் அமைப்பின் மதுரை மாவட்ட நிர்வாகியுமான என்.ஜி. மோகன், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்தில் கடந்த 2018-2019 முதல் 2021. 2022 ஆம் ஆண்டிற்கு வரப்பெற்ற நிதி சார்ந்த வரவு செலவு பதிவேடுகள் மற்றும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி (CWSN, Homebased) மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உதவித்தொகை விவரங்கள் சார்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார்

இந்நிலையில் அந்த அலுவலகத்தின் உதவி திட்ட அலுவலரால் உரிய தகவல் வழங்கப்படாவில்லை என மாநில தகவல் ஆணையத்திற்கு என் ஜி மோகன் மேல்முறையீடு செய்தார்

அம்முறையீட்டின் அடிப்படையில் சென்னை மாநில தகவல் ஆணையத்தில் 13.05.2026 அன்று நேரடி விசாரணைக்கு ஆஜராகுமாறு பொது தகவல் அலுவலர் மற்றும் உதவித் திட்ட அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 13.05.2026 அன்று நடைபெற்ற நேரடி விசாரணையில் ஆர்.டி.ஐ மூலம் கோரப்பட்ட தகவலை வழங்காததற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.15,000/- (ரூபாய் பத்தினைந்தாயிரம் மட்டும்) மனுதாரருக்கு வழங்க மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மேலும் மனுதாரர்களால் கோரப்பட்ட உரிய ஆவணங்களின் நகல்களை 21.05.2026 அன்று நேரில் தேனி மாவட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அலுவலகத்திற்கு நேரடியாக வந்து மனுதாரர் பெற்றுக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆர் டி ஐ ஆர்வலர் என் ஜி மோகனை தொடர்பு கொண்டு கேட்டபோது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது பொதுமக்களுக்காக பணி செய்யும் அரசு அலுவலர்களை உரிய முறையில் செயல்பட தூண்டும் மிகச் சிறந்த கருவியாகும். அதனை சரியான முறையில் பயன்படுத்தி அரசு இயந்திரங்களை செயல்பட வைப்பது ஆர்டிஐ ஆர்வலர்களின் கடமை என கருதுகிறேன். அந்த வகையில் மாநில தகவல் ஆணையம் அளித்துள்ள இந்த உத்தரவு, மக்களுக்கான சேவையை எந்தவித சுணக்கமும் இன்றி அரசு அலுவலர்கள் செய்து தர வேண்டும் என்பதற்கான தூண்டுகோலாக இந்த உத்தரவை நான் பார்க்கிறேன். இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள ஆர் டி ஐ என்ற ஆயுதத்தை சிறப்பான முறையில் அனைவரும் பயன்படுத்துவதற்கு உரிய விழிப்புணர்வை பெற வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றார்.