

ரயில் ஓட்டுநர்கள் இனி பணிக்குச் செல்லும் போது இளநீர், குளிர்பானங்கள், புத்துணர்வூட்டும் திரவம் உள்ளிட்டவற்றை அருந்தக் கூடாது என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் ரயில்வே மண்டலத்தில் சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், பொதுவாக ரயில் ஓட்டுநர்கள் ரயிலை இயக்குவதற்கு முன்பு மது அருந்தி உள்ளனரா? என சோதனை செய்யப்படும். அவ்வாறு மூச்சு பரிசோதனை கருவி மூலம் சோதனை செய்யப்பட்டபோது அவர்கள் மதுபானம் அருந்தியுள்ளதாக பரிசோதனை கருவி காட்டியது. இதனால் ஓட்டுநர்களின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால் ரத்த மாதிரியில் எந்தவித மதுபானமும் அருந்தவில்லை என்பதும் தெரியவந்தது.
இதற்குக் காரணம் சில குளிர்பானங்கள், இளநீர், ஹோமியோபதி மருந்துகள், இருமல் மருந்து, சிலவகை வாழைப்பழங்கள் மற்றும் வாய் புத்துணர்வு திரவம் ஆகியவற்றை ஓட்டுநர்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால் மதுபானம் அருந்தியுள்ளதாக தவறான முடிவை மூச்சு பரிசோதனை கருவி காட்டியுள்ளது. இந்த தவறான முடிவு காரணமாக ஓட்டுனர்களுக்கு பணி ஒதுக்குவதில் தொடர்ந்து சிரமம் எழுந்து வருகிறது. எனவே பாதுகாப்பான ரயில் பயணத்தை உறுதிப்படுத்த ரயில் ஓட்டுநர்கள் பணிக்கு வரும்போது இது போன்ற குளிர்பானங்கள் மற்றும் மருந்து வகைகளை எடுத்துக் கொள்ள ரயில்வேத்துறை தடை விதித்துள்ளது.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் மருந்துகள் எடுத்துக் கொள்ளும் ஓட்டுநர்கள் முன்கூட்டியே கட்டுப்பாட்டு அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும். மேலும் ஆல்கஹால் இடம் பெற்றுள்ள மருந்துகளை ரயில்வே மருத்துவர்களின் எழுத்துப்பூர்வ அனுமதியின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த விதிமுறைகளை மீறியும் மூச்சுப்பரிசோதனையில் மதுபானம் அருந்தி இருப்பதாக கருவி காட்டினால் ஓட்டுநர்கள் வேண்டுமென்றே ரயில் போக்குவரத்தை தவிர்க்க முயற்சி செய்கிறார்கள் என உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரயில்வே துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

