தமிழகத்தில் கொரோனா அச்சுறுதல் காரணமாக கடந்த 1 வருடத்துக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து, செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்து நிலையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
மதுரையில் உள்ள மதுரை மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டு மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு செல்ல தொடங்கியுள்ளனர். மேலும் ,அனைத்து பள்ளிகளிலும் காலை எட்டு முப்பது மணி அளவில் இருந்து மாணவர்கள் வரத்தொடங்கினர் பள்ளியின் முகப்பில் ஆசிரியர்கள் மாணவர்களை முகக்கவசம் அணிந்தவாறு உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களையும் வரிசைப்படுத்தி உடல் வெப்பநிலை பரிசோதித்து பிறகு வகுப்பறைக்கு செல்ல அனுமதித்தனர். இந்நிலையில், மாணவர்கள் முறையாக தனிமனித இடைவெளியை பின்பற்றி அமரவைக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.