மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணி அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நிலம் வழங்க தாமதமானதால் தான் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரையை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்கியது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நிதி ஆதாரம் வழங்கும் என்று சொன்னார்கள் என்று அவர் கூறினார். கடந்த வாரம் ஜப்பான் சென்றபோது ஜைக்கா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டதாக கூறியுள்ள மா.சுப்பிரமணியன், நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார். மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2028ஆம் ஆண்டு இறுதியில்தான் முடியும் என்று கூறியுள்ளார்கள், இது தான் உண்மை நிலவரம் என்று அவர் விளக்கம் அளித்தார்.