• Sat. Apr 20th, 2024

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது: ஓ.பி.எஸ் கண்டனம்

ByA.Tamilselvan

Oct 25, 2022

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு கண்டனம்
ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் …..
கோயம்புத்தூர் மாவட்டம், கோட்டைமேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நேற்று முன்தினம் பலத்த வெடி சத்தத்துடன் கார் ஒன்று வெடித்து சிதறியதாகவும்; இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்; இதற்குக் காரணம் எரிவாயு உருளை வெடிப்பு என்று கூறப்பட்டாலும், காருக்குள் இருந்தவர் காவல் துறையினரின் கண்காணிப்பில் இருந்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. வெடித்து சிதறுண்ட வாகனத்திற்குள்ளும், சம்பவம் நடந்த இடத்திலும் ஆணிகளும், கோலி குண்டுகளும் சிதறிக் கிடந்ததாகவும், மேற்படி விபத்தில் உயிரிழந்த நபர் இதற்கு முன்பு தேசிய உளவுத் துறை முகமையால் விசாரணை செய்யப்பட்டதாகவும், இறந்தவரின் இல்லத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெடிகுண்டுகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியத் துகள்கள், மரக்கரி போன்றவை கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.
காவல் துறை தலைமை இயக்குநர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார் என்றால் இதன் பின்னணியில் ஏதோ இருக்கிறது என்பது தெளிவாகிறது. மேலும், இது 1998-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீரழித்துக் கொண்டிருக்கிற தி.மு.க. அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீவிரவாதத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு காவல் துறைக்கு உள்ளது. முதல்-அமைச்சர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை வன்முறை யாளர்களிடமிருந்தும், தீவிரவாதிகளிடமிருந்தும், பயங்கரவாதிகளிடமிருந்தும் காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *