நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் தாராபுரம் தொகுயில் போட்டியிட்ட பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் எல். முருகன், சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதையடுத்து, பாஜக தலைமை அவரை மத்திய அமைச்சராக்கியது. கடந்த ஜூலை மாதத்தில், மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டதில் தமிழக பா.ஜனதா மாநில தலைவராக இருந்து வந்த எல்.முருகன் மத்திய இணை மந்திரியாக நியமிக்கப்பட்டார். இவருக்கு மீன்வளம், கால்நடை, பால் பண்ணை மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை ஒதுக்கப்பட்டது.
இந்தியாவில் எத்தனையோ பெரு நகரங்கள் உள்ளபோதும், தமிழகத்தின் கடைகோடி கிராமத்தில் பிறந்த எல்.முருகனுக்கு கிடைத்த இந்த பதவி அனைவரையுமே உற்று நோக்க வைத்தது. சிறுவயது முதலே படிப்பில் மிகவும் ஆர்வம் கொண்ட எல்.முருகன் சட்டப்படிப்பில் எம்.எல். மற்றும் பி.எச்டி. வரை முடித்து பா.ஜனதாவில் தன்னை இணைத்து கொண்டார். அவரது அயராத உழைப்பை கண்டு மத்திய அரசு அவருக்கு மத்திய இணை மந்திரி பதவியை வழங்கியது.
இதையொட்டி முருகன் கடந்த ஜூலை 7-ந் தேதி அன்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்று கொண்டார். தற்போது தமிழகத்தில் இருந்து மத்திய அமைச்சராக பதவியேற்றிருப்பவர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. வக்கீல் படிப்பை முடித்த எல்.முருகன் பா.ஜனதாவில் இணைந்து எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத்தலைவர், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர், பா.ஜனதா மாநில தலைவர் என படிப்படியாக உயர்ந்து தற்போது, மத்திய இணை அமைச்சர் என்ற உச்சத்தை எட்டி உள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருந்தாலும் அதில் வெற்றிபெறும் அளவுக்குப் பாஜகவுக்குப் பேரவையில் போதிய பலம் இல்லாத நிலையில், பாஜக தலைமை, தற்போது அவரை மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது. வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி நான்கு மாநிலங்களவை இடங்களுக்கு அங்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அங்கிருந்து எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.