• Mon. Sep 14th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு யோகா திருவிழா 2026: 72,000 வினாடிகள் யோகாசனம் செய்து உலக சாதனை..,

ByPrabhu Sekar

Aug 24, 2026

சென்னையில் இந்திய யோகா கழகத்தின் இணை மையமான குளோபல் ஸ்கூல் ஆஃப் யோகா சார்பில் 13-வது ஆண்டு “தமிழ்நாடு யோகா திருவிழா – 2026” பிரமாண்டமாக நடைபெற்றது. நொளம்பூர் டெக்கலத்தான் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், யோகாவின் பெருமையையும் பாரம்பரியத்தையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவின் முக்கிய அம்சமாக, யோக பாரம்பரியத்தில் குறிப்பிடப்படும் 72 ஆயிரம் நாடிகளை போற்றும் வகையில் “72 ஆயிரம் விநாடிகள் – 72 ஆயிரம் யோகாசனம்” என்ற கருப்பொருளில் தொடர்ந்து 72 ஆயிரம் விநாடிகள் யோகாசனங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சிறப்பான முயற்சி குளோபல் புக் ஆப் யோகா ரெக்கார்ட்ஸ் அமைப்பின் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டு பெரும் கவனம் பெற்றது.

மேலும், தமிழ்நாடு முழுவதிலுமிருந்து வந்த ஏராளமான யோகா மாணவ-மாணவிகள், யோகா ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடைபெற்றன. இதில் பங்கேற்பாளர்கள் பல்வேறு பிரிவுகளில் தங்களது யோகா திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டுகளை பெற்றனர்.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், கிரேட்–1 சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பாக செயல்பட்டு தேர்வு செய்யப்பட்ட வீரர், வீராங்கனைகள் வரவிருக்கும் தேசிய மற்றும் சர்வதேச யோகா போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

இந்த மாபெரும் யோகா திருவிழாவிற்கு யுனிவர்சல் யோகா கிளப் மற்றும் தமிழ்நாடு யோகா ஸ்டுடியோஸ் உரிமையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஆதரவு வழங்கின. யோகாவின் சிறப்பு, திறமை, ஒற்றுமை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற “தமிழ்நாடு யோகா திருவிழா – 2026” சிறப்பாக நிறைவடைந்தது.