தமிழகத்தின் புதிய ஆளுநராக தற்போது பொறுப்பேற்று விட்டார் ஸ்ரீரவீந்திர நாராயணன் ரவி எனப்படும் ஆர்.என்.ரவி.
தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழக அரசியலில் புதிய பரபரப்பு பந்தாடத் தொடங்கிவிட்டது.
ஆளுநராக என்.ஆர். ரவி அறிவிக்கப்பட்ட உடனேயே, அதிமுக, பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் ஆளுநர் நியமனத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
ஆனால் புதிய ஆளுநரின் நியமனத்துக்கு எதிராக திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஆரம்பத்திலேயே அஸ்திரங்களை வீசத் தொடங்கின.
‘ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியான ரவியை ஆளுநராக நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆளுநராக இவர் நியமிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கிறேன்’ என்று ஏவுகணை ஒன்றை வீசினார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி.
‘சிறந்த கல்வியாளர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகளை ஆளுநராக நியமிப்பதுதான் வழக்கம். ஆனால், பயங்கரவாதத்தை ஒடுக்கும் பொறுப்பில் செயல்பட்ட ஒருவர் ஆளுநராக நியமித்து, தமிழகத்தில், ஜனநாயகப் படுகொலையை நடத்த அவரை ஆயுதமாகப் பயன்படுத்த முயன்றால், காங்கிரஸ் கட்சி, பிற கட்சிகளை ஒன்று திரட்டி போராடும் சூழல் உருவாகும்’ என்றும் கே.எஸ்.அழகிரி எச்சரித்திருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனோ, ‘இன உணர்வையும், மொழி உணர்வையும் அழிக்கக்கூடிய ஒருவரை ஆளுநராக நியமித்திருக்கிறார்கள். இங்கு யாரை ஆளுநராக நியமித்தாலும் ஆட்சியைக் கலைத்துவிடும் தெம்பும், திராணியும் அவர்களுக்குக் கிடையாது’ என்று சவால் விட்டிருந்தார்.
‘ஆர்.என்.ரவியின் நியமனத்தைத் திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட முனைந்தால் கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுக்கு ஆதரவாக நிற்போம்’ என்றும் திருமாவளவன் கூறியிருந்தார்.
ஆக, ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்கும் முன்னரே தமிழக அரசியலில் அனல்காற்று அடிக்கத் தொடங்கிவிட்டது என்றே கூற வேண்டும்.
இதற்கிடையே ஆளுநராக பதவியேற்க, டெல்லியிருந்து சென்னை வந்தடைந்த ஆர்.என்.ரவியை, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் விமானநிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்று இருக்கின்றனர்.
‘மாநிலத்தின் வளர்ச்சிக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு புதிய ஆளுநர் உதவியாக இருப்பார்’ என்று முதல்வர் ஸ்டாலின் ஒருபக்கம் நம்பிக்கைத் தெரிவித்துளார்.
இருந்த போதிலும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்டமுன்வரைவு போன்றவை தமிழக சட்டமன்றத்தில் சுடச்சுட தாக்கல் செய்யப்படும் இந்த சூழ்நிலையில், புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, ஆளுநர் மாளிகையில் இன்று புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஆர்.என்.ரவி, ‘ஆளுநர் பதவி என்பது விதிகளுக்கு உட்பட்டது. தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு உள்ளது. எனவே விதிகளுக்கேற்பத்தான் செயல்படுவேன்’ என்று அறிவித்துள்ளார்.
அதேவேளையில், ‘தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு காலஅவகாசம் தேவை’ என்றும் ஆளுநர் கூறி ஒரு ‘இக்கு’ வைத்துள்ளார்.
ஆர்.என்.ரவி, தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தின் மீதான பிடியை மத்திய அரசு இறுக்க நினைப்பதாகவே டெல்லி வட்டாரங்கள் கருதுகின்றன.
புதிய ஆளுநர் நியமனத்தால் தி.மு.க. வட்டாரங்களும் சற்று கலக்கத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது.
ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு இணக்கமாகச் செயல்படுவாரா அல்லது பன்வாரிலால் போல ஆய்வுப்பணிகள் என்ற பெயரில் நெருக்கடி தருவாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.
பொறுத்திருந்து பார்ப்போம்.