• Thu. Apr 25th, 2024

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் தச்சை கணேச ராஜாவுக்கு பாராட்டு

Byதரணி

Mar 7, 2023

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜாவுக்கு சோலைக்குள் நெல்லை அமைப்பு சார்பில் பாராட்டு விழா
நமது பூர்வீக வேளாண் குடிகள் இயற்கை விவசாயத்தையே செய்து வந்தனர். இடைக்காலத்தில் அதிக அளவு உற்பத்தி, குறுகிய கால உற்பத்தி போன்றவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு ஒட்டு ரகங்களும் அவற்றை விரைவில் வளர்ப்பதற்கு வேதிப் பொருள்கள் நிறைந்த உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் விவசாயத்தில் பயன்படுத்தப் பட்டு வந்தன. இதனால் மனிதர்கள் உட்கொள்ளும் உணவுப் பொருட்கள் அனைத்தும் வேதிப்பொருள்கள் நிறைந்த நஞ்சாக மாறத் தொடங்கியது. இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று புகழப்படும் நம்மாழ்வார் போன்றவர்கள் மீண்டும் இயற்கை விவசாயத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். தமிழகம் முழுவதும் அவரது கொள்கையை பின்பற்றி பலர் இயற்கை விவசாயத்தில் இறங்கத் தொடங்கினர்.
நெல்லை மாவட்டத்தில் தற்போது அதிமுகவின் நெல்லை மாவட்டச் செயலாளராகஇருக்கும் தச்சை கணேசராஜா நம்மாழ்வாரின் கொள்கைகளை பின்பற்றி கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இயற்கை விவசாயம் மேற்கொண்டு வருகிறார்.நெல், வாழை,தென்னை, கொய்யா,நெல்லி, நாவல் போன்ற பல்வேறு பயிர்களும், மரங்களும் இவரது தோட்டத்தில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டு வருகின்றன. பஞ்சகவ்யம், மீன் கரைசல், அமிர்த கரைசல் போன்ற இயற்கை உரங்களும் இங்கேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நமது பாரம்பரிய நாட்டு மாடு வகைகளும், நாட்டு நாய் வகைகளும் இங்கு வளர்க்கப்பட்டு வருகின்றன.இயற்கையையும், இந்த மண்ணையும் நேசிக்கும் இவரை சோலைக்குள் நெல்லை அமைப்பினர் பொன்னாடை அணிவித்து மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினர். சோலைக்குள் நெல்லை அமைப்பின் நிறுவனர் பொறியாளர் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் விநாயகம், பத்மகுமார் மற்றும் ராஜகோபால், முத்து குட்டி பாண்டியன் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *