• Thu. Mar 28th, 2024

நாகர்கோவில் தி மு க அலுவலகத்தில் கலைஞர் சிலையை முதல்வர் திறந்து வைத்தார்

நாகர்கோவில் தி மு க அலுவலகம் வளாகத்தில் கலைஞர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சிலையை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தி.மு.க அரசு பொறுப்பேற்று 22 மாதங்கள் ஆகிறது. 22 மாதங்கள் நிறைவுபெற்றுள்ள நிலையில் இந்த சமுதாயத்துக்கும், மக்களுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பணிகள் எல்லோரும் போற்றும் வகையில் அமைந்திருப்பதை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது. இந்த சூழலில்தான் இன்று குமரி மாவட்ட தி.மு.க சார்பில் சிறப்பான நிகழ்ச்சி எற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம் உயிரோடு கலந்திருக்கக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் திரு உருவ சிலையை திறந்து வைக்கும் சிறப்பான வாய்ப்பு கட்சி தலைவரான எனக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை நான் நிறைவு செய்துள்ளேன்.
கலைஞரின் மறைவுக்கு பிறகு அவரது சிலையை அண்ணா அறிவாலயத்தில் திறந்துவைத்தோம், அடுத்து கலைஞரின் குருகுலமாக விளங்கும் ஈரோட்டில் சிலை திறந்தோம். பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் காஞ்சிபுரத்தில் திறந்தோம். தொடர்ந்து சேலம் போன்ற பல இடங்களில் சிலை திறந்துவைத்திருக்கிறோம். இன்று நாகர்கோவிலில் இருக்கும் மாவட்ட கழக அலுவலகத்தில் சிலை திறந்து வைத்திருக்கிறோம். இந்த சிலை திறந்து வைக்கும் நேரத்தில் நான் உங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன். எந்த லட்சியத்துக்காக கலைஞர் அண்ணா வழியில் செயல்பட்டாரோ, அந்த லட்சியத்தை மனதில் ஏற்றுக்கொண்டு கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். நாம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும் நம் கடமையை செய்கிறோம். ஆகையால் நம்மை தமிழகம் மட்டுமல்ல இந்திய தலைவர்களும் வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அதுபோல கடல் கடந்து வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கக்கூடிய பல்வேறு அமைப்புகளும், தமிழர்களும் நமது ஆட்சியையும், சாதனைகளையும் மனதார பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் நாட்டை பிளவுப்படுத்தும் எண்ணத்துடன் உலவிக்கொண்டிருக்கும் சிலர், திராவிட மாடல் என்று சொல்லி மக்களை கவரும் ஆட்சிநடத்துகிறார்களே, தொடர்ந்து இந்த ஆட்சியை விட்டால் நம் நிலை என்ன ஆவது என நம் மீது புழுதி வாரி தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஆட்சியை எப்படியாவது கெடுதல் செய்து அப்புறப்படுத்த வேண்டும் என பார்க்கிறார்கள். எங்காவது சாதி, மத கலவரத்தை தூண்டலாமா. மக்களிடம் பிளவுகளை ஏற்படுத்தலாம என திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். என்னை பொறுத்தவரை நம் மீது சொல்லப்படும் விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பது இல்லை. யாரை வைத்து பதில் சொல்ல வேண்டுமோ அவர்களை வைத்து பதில் சொல்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் சிறப்பான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் வெற்றிப்பெற்றுள்ளோம். தற்போது நடந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளோம்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நாம் நடந்த தேர்தல்களில்கூட நாம் வெற்றிப்பெற்றுள்ளோம். இதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த 1-ம் தேதி எனது பிறந்தநாள் விழா நந்தனத்தில் நடைபெற்றது. அதில் பல்வேறு மாநில தலைவர்களை வைத்துக்கொண்டு நான் பேசும்போது, தமிழகத்தில் நாங்கள் கூட்டணி நன்றாக வைத்துள்ளோம். நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். அதனால் நாங்கள் தொடர்ந்து வெற்றிபெறுகிறோம். நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் நாடு முழுவதும் இருக்கும் மதசார்பற்ற தலைவர்கள் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்றால் நாம் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும். நம் பிரச்னைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, பிரிஸ்டீஜ் பார்க்காமல் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்தியாவையும் காப்பாற்ற முடியும் என்றேன். அதே உணர்வோடு எனது கடமையை ஆற்றப்போகிறேன், ஆற்றிக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் தரக்கூடிய ஒத்துழைப்புதான் காரணம். நானும் உங்கள் ஒத்துழைப்போடு பணிகளை செய்து வருகிறேன். கலைஞர் சிலையை திறந்தால் மட்டும் போதாது, அவர் எதற்காக பாடுபட்டாரோ அந்த உணர்வோறு நீங்கள் செயல்பட வேண்டும் கடமையாற்ற வேண்டும். கலைஞர் கூறிய லட்சியத்தை மனதில் வைத்து நாம் செயலாற்ற வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *