சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு பத்து லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதால் மனமுடைந்த 19 வயது கல்லூரி மாணவி ஆதிரா தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தலைமறைவான கேரள வாலிபரை கன்னியாகுமரி மாவட்ட தனி போலீஸ் படையினர் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் பதுங்கி இருந்த போது கைது செய்துள்ளனர். குமரி மாவட்டம் கொண்டுவரப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பளுகள் அருகே உள்ள கருமனூர் பகுதியை சேர்ந்தவர் திருமதி வீணா. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் 19 வயதான ஆதிரா. களியக்காவிளை அருகே ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். பொழுதுபோக்காக சமூகவலைத்தளங்களில் இணைந்த ஆதிராக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதில் இருவரும் பல்வேறு இடங்களில் சந்தித்த போது எடுத்த புகைப்படங்கள் ஆகியவற்றை ஒரு காலகட்டத்தில் கேரள வாலிபர் நிகில் பிரசாத் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு 10 லட்ச ரூபாய் கேட்டு பெண்ணிடம் மிரட்டி உள்ளார். இதனால் மனம் உடைந்து போன பெண் கடந்த மாதம் நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தில் வந்து கேரளா வாலிபரின் மிரட்டல் குறித்து புகார் கொடுத்துள்ளார். இதற்கு காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை என கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து மிரட்டல் வந்த காரணத்தால் கடந்த 22ஆம் தேதி ஆதிரா தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிராவின் லேப்டாப் செல்போன் ஆகியவற்றை சோதனை செய்தபோது, அதில் வாலிபர் ஒருவருடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணையில் அவர் கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த நிகில் பிரசாத் ( வயது 30 ) என தெரியவந்தது. நிகில் பிரசாத்தை தேடி தனிப்படையினர் கேரள மாநிலம் திருச்சூர் சென்றனர். அங்கு அவர் தலைமறைவானது தெரிய வந்தது. பின்னர் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் தலைமறைவாகி இருப்பதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து தனிப்படையினர் பஞ்சாப் மாநிலத்திற்கு சென்று நிகில் பிரசாத்தை சுற்றி வளைத்துப் பிடித்து இன்று கன்னியாகுமரி மாவட்டம் பளுகள் காவல் நிலையத்தில் கொண்டு வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் கட்டமாக அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.