• Fri. Mar 29th, 2024

கங்கனா ரனாவத்தை நேரில் ஆஜராக சம்மன்

Byமதி

Nov 25, 2021

சீக்கியர்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில், நடிகை கங்கனா ரனாவத்துக்கு டெல்லி சட்டமன்றத்தின் ‘அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான குழு’ சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மத்திய அரசின் முடிவை விமர்சித்து நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர், ”வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்பட்டது வருந்தத்தக்கது, வெட்கக்கேடானது மற்றும் முற்றிலும் நியாயமற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பதிலாக தெருவில் இருப்பவர்கள் சட்டம் இயற்ற தொடங்கி விட்டார்கள்” என்று கடுமையான வார்த்தைகளால் குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர் வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டிருந்தார். மேலும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சீக்கியர்களை அவரது காலணியில் போட்டு நசுக்கினார் எனவும் மறைமுகமாக தெரிவித்து இருந்தார். கங்கனாவின் இப்பேச்சுக்கு பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ராகவ் சதா தலைமையிலான ‘அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான குழு’வுக்கு முன்பு கங்கனா டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீக்கியர்களை இழிவுப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கங்கனாவுக்கு எதிராக ஏற்கனவே மும்பையில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *