பஞ்சபூத ஸ்தலங்களில் பிருத்வி எனும் மண் ஸ்தலமாக விளங்கும் பழமையானதும், உலகப் பிரசித்தி பெற்றதுமான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் நாள்தோறும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
8வது நாள் இரவு உற்சவத்தை முன்னிட்டு ஏகாம்பரநாதருக்கும், ஏலவார்குழலி அம்மனுக்கும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து மல்லிகை பூ, மனோரஞ்சிதம் பூ, ரோஜா பூ, மலர் மாலைகள் சூட்டி, வைரம் வைடூரியம் திருவாபரணங்கள் அணிவித்து ராஜா அலங்காரத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருள செய்து நான்கு ராஜ வீதிகளில் மேள தாள, சிவ வாத்தியங்கள் முழங்க, திருவீதி உலா உற்சவம் நடைபெற்றது.
இந்த திருவீதி உலா உற்சவத்தில் சண்டிகேஸ்வரர், விநாயகர், சுப்ரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் பின்தொடர்ந்து செல்ல ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருவீதி உலா வந்தனர். குதிரை வாகனம் உற்சவத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து வழிநெடுகிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.