எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கிறது இது எல்லாம் பாரதிய ஜனதா கட்சி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் கடந்த 9ஆம் தேதி யூடியூபர் மாரிதாஸ் தமிழக அரசுக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ட்விட்டரில் கருத்து பதிவிட்டதாக காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை உத்தமபாளையம் கிளை சிறையில் அடைத்துள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போட்ட வழக்கு ஒன்றையும் விசாரணை நடத்தி மற்றுமொரு வழக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் காவல்துறை, 124 ஏ சட்டப்பிரிவில் மாரிதாஸ் மேல் வழக்கு தொடுக்கின்றனர். திமுகவினர் ராணுவ அதிகாரி இறந்தபோது பிபின் ராவத்தை கொன்றவர் யார்? என்றும் ராணுவத்தைக் கேலி செய்தும், திமுகவின் ஊடகப்பிரிவினரும், திமுகவின் நிர்வாகிகளும் வெளியிட்ட, அந்த 300க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளின் பதிவு எங்களிடம் இருக்கிறது.
தி.க அல்லது திமுகவினர் அவதூறு பரப்பினால் காவல் துறை தன் கண்களை மூடிக்கொள்கிறது. ஆனால் ஒரு தேசியவாதி கருத்து சுதந்திரத்துடன் தவறை சுட்டிக்காட்ட விரும்பினால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்படுகிறது. திமுக அவதூறு பரப்பியதற்கு நான் ஆதாரம் தருகிறேன். நடுநிலையாக அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடுக்க மாநில அரசு தயாரா?
தமிழக டிஜிபியின் நடவடிக்கை ஒரு தலைப்பட்சமாக மாறிப் போனது. ராணுவத்தின் உயர் அதிகாரி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்களை கிண்டல் செய்து ட்வீட்டரில் செய்திகள் வெளியிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறாரா டிஜிபி அந்த செய்திகளெல்லாம் அவர் கண்ணில் படவில்லையா? அப்புறம் என்ன அவர் என்ன டிஜிபி ஊடகவியலாளர் மாரிதாஸ் மீது கம்ப்ளைன்ட் கொடுத்தது யார்? அரசு அதிகாரியா? அல்லது போலீசின் சூமோட்டோ வழக்கா?, திமுகவின் ஊடக பிரிவில் இருக்கும் சின்னப் பையன்களின் புகார்களை கையிலெடுத்து மாரிதாஸ், கல்யாணராமன் போன்றோரை யெல்லாம் கைது செய்து ஆளும் கட்சியின் ஏவலராக போலீஸ் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.