பாமக நிருவாகி டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி கட்சியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநாடு கூட்டம் என கூட்டி அடுத்த ஆட்சி நம் ஆட்சியாக அமையவேண்டும் என சொல்லி வரும் நிலையில் பாமக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய சம்பவம் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம் வருகை தந்தார். அதில் சேலத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பை அவர் நெகிழ்ச்சியுற பேசியுள்ளார். அதே நேரத்தில் அதில் பாமகவை சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் பாமக மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டியுள்ளனர்.

அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாமக எல்எல்ஏ அருள், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். இந்த ஆட்சியில் துண்டு சீட்டில் குறைகளை எழுதி அளித்தாலும் அதனை நிறைவேற்றும் நிலை உள்ளது. சேலத்தில் கடந்த மாதம் அமைச்சரிடம் துண்டு சீட்டில் கொடுத்த மனுவிற்கு விடையாக முதியோர் உதவி தொகை கிடைத்துள்ளது என்று அவர் முதலமைச்சரையும் திமுக ஆட்சியையும் பாராட்டினார்.
இதே போல் மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கூறுகையில், கடந்த காலங்களில் உள்ள முதல்வர்களை விட மிக எளிமையான முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றும், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை கைவிடாமல், தாயுள்ளத்தோடு மிக சிறப்பாக நிறைவேற்றி சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று உள்ளதாகவும், அனைத்து தொகுதிக்கும், எந்த கட்சிக்கும் பாகுபாடின்றியும் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று புகழாரம் சூட்டினர்.