

வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மன்மதலீலை’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் நேற்று வெளியானது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட ஷாக்கில் உள்ளனர். மேலும், வெங்கட் பிரபு என்ன இதெல்லாம் என்றும், இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் கருத்துக்களையும் கூறி வருகின்றனர். ஆனால், ஒரு சிலரோ தேங்யூ தலைவா என்று வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை அடுத்து வெங்கட் பிரபு இயக்க உள்ள திரைப்படத்திற்கு ‘மன்மத லீலை’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மணிவண்ணன் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். பிரேம்ஜி இசையமைக்கும் இப்படத்துக்கு தமிழ் ஏ.அழகன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில், மன்மதலீலை திரைப்படம் கிளிம்ப்ஸ் வீடியோவை நேற்று சிம்பு வெளியிட்டார். 40 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவின் பின்னணியில் மன்மதலீலையை வென்றார் உண்டோ என பாகவதர் பாடல் ஓட, அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டை மற்றும் ரியா சுமனையும் மாறி மாறி முத்தமிடுகிறார். ஆத்தாடி என்னடா நடக்குது அங்க, அம்மாஞ்சி அசோக் செல்வனா இது என்று அந்த கிளிம்ப்ஸை பார்த்தால் கேட்கத்தோன்றுகிறது.
மன்மதலீலை முக்கிய அப்டேட் வருது வருதுனு சொன்னது எல்லாம் முத்த அப்டேட் பற்றி தானா. வெங்கட் பிரபு உங்க கிட்ட இருந்து, இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்று பல ரசிகர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வெங்கட்பிரபுவின் 10வது படமாக மன்மதலீலை திரைப்படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. வெங்கட் பிரபுவின் உதவி இயக்குனர் மணிவண்ணன் இந்த கதையை எழுதியுள்ளார். திருமணத்திற்கு பிறகு மற்றொரு பெண்ணிடம் ஏற்படும் காதலை சொல்லுவது தான் மன்மதலீலை இப்படம் தெலுங்கிலும் அதே பெயரில் தயாரிக்கப்பட உள்ளது.