செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் பாரதிதாசன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் 28வது ஆண்டு ஆடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

ஆடி மாதம் 15ஆம் தேதியை முன்னிட்டு, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கங்கை திரட்டி காப்பு கட்டும் நிகழ்வுடன் திருவிழா தொடங்கியது. பின்னர் சிறப்பு பூஜைகள், பக்தர்களுக்கு கூழ் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.
இரவு நடைபெற்ற திருவீதி உலாவில், வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய முத்துமாரியம்மனை, மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

திருவீதி உலாவின் போது, பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அருளாசி பெற்றனர். திருவிழா முழுவதும் பக்தி பரவசம் நிலவியதுடன், குடும்பம் குடும்பமாக மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

இந்த ஆடி திருவிழாவில் கஸ்பாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ முத்துமாரியம்மனை தரிசித்து வழிபட்டனர்.




