

படித்துப் பார்ப்பதற்காக சம்மனை நான் தான் கிழிக்கச் சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யட்டும் என்று சீமான் மனைவி கயல்விழி கூறியுள்ளார்.
நடிகை விஜயலட்சுமி வழக்குத் தொடர்பாக சீமான் வீட்டில் போலீசார் நேற்று சம்மன் ஒட்டினர். அப்போது அந்த சம்மனை வீட்டின் பணியாளர் ஒருவர் கிழித்தெறிந்தார். இது தொடர்பாக போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் வீட்டிற்கு செல்ல அனுமதிக்காமல் போலீசாரை தடுத்து நிறுத்திய வீட்டின் காவலாளியும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.அவர்கள் இருவரையும் 13-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், சீமானின் மனைவி கயல்விழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பாலியல் வழக்கின் விசாரணையை விரைவு செய்ய நீதிமன்றம் கூறியுள்ளது. அதற்காக அடுத்த நாளே வீட்டுக்கு வருவீர்களா? வீட்டில் இருந்து வெளியே வர சங்கடமாக இருந்ததால் படித்துப் பார்ப்பதற்காக சம்மனை நான் தான் கிழிக்கச் சொன்னேன். முடிந்தால் என்னை கைது செய்யட்டும்.
போலீஸ் கொடுக்கும் சம்மனை கையெழுத்திட்டு பெற தயாராகவே இருந்தோம். கடந்த முறை சம்மன் கொடுக்க வந்தபோது சீமான் தேதியை கொடுத்தார். ஆனால் பாதுகாவலரை கைது செய்வார்கள் என எதிர்பார்க்கவில்லை. அத்துடன் அவர்களை போலீசார் அடித்துள்ளனர். முன்னாள் ராணுவ வீரரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டது மிகவும் தவறானது.
எங்கள் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் செயல்படுகிறார். நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் மீது மனித உரிமை ஆணையத்தில் வழக்குத் தொடருவோம். தன் மீதான வழக்குகளை சீமான் சட்டப்படி எதிர்கொள்வார்” என்றார்.

