
தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி அளிக்கப்படும் என்று மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், இளைஞர்கள், ஸ்டார்ட் அப் நிறுவன தொழில்முனைவோர்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து தனது எக்ஸ் தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிவிட்டுள்ளார். அதில் தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி , “தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது. மாநில அரசின் கடுமையான இரு மொழிக் கொள்கை காரணமாக அண்டை மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களுடன் ஒப்பிடும்போது இந்த பிராந்திய இளைஞர்கள் வாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கிறார்கள். துரதிருஷ்டவசமாக இந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் கூட படிக்க அனுமதிக்கப்படாதவர்களாக அவர்கள் உணர்கிறார்கள். இது உண்மையிலேயே நியாயமற்றது, மொழியைப் படிப்பதற்கான தேர்வு நமது இளைஞர்களுக்கு இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
