• Wed. Apr 24th, 2024

ராம்குமார் மரணம் வழக்கிற்க்கு இடைக்காலத் தடை

Byமதி

Dec 1, 2021

பொறியாளர் ஸ்வாதி கொலை வழக்கில் புழல் சிறையிலடைக்கப்பட்ட ராம்குமார், சிறையில் உயிரிழந்தது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்தும் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இப்போது வரை யாராலும் மறக்க முடியாது என்றால், அந்த வழக்கில் குற்றவாளி என கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், சிறையில் மின்சார வயர் கடித்து தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கபட்டது மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

இந்த தற்கொலை மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். ராம்குமாரின் தந்தை பரமசிவம் புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

மனித உரிமை ஆணைய விசாரணையை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்கக்கோரியும் சிறை கண்காணிப்பாளராக இருந்த ஆர்.அன்பழகன் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘சம்பவம் நடந்து ஓராண்டிற்குள் விசாரணைக்கு எடுப்பதற்கு பதிலாக, 4 ஆண்டுகளுக்கு பிறகு மாநில மனித உரிமை ஆணையம் விசாரிக்க சட்டத்தில் இடமில்லை. ராம்குமார் தந்தை தரப்பில் தவறான கருத்துகள் ஊடகங்களில் பரப்பப்படுகிறது’ என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் அமர்வு ஆணையத்தில் மீண்டும் டிசம்பர் 7ல் வழக்கு, விசாரணைக்கு வருவதால், மனித உரிமை ஆணைய விசாரணைக்கு தடை விதித்தும், ஆணைய பதிவாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *