• Thu. Apr 25th, 2024

மதுரையில் வாக்கு எண்ணிக்கை பணி தீவிரம்!

Byகுமார்

Feb 22, 2022

மதுரை மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 19ஆம் நாள் 1615 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளிலுள்ள 322 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த பிப்ரவரி 19ஆம் நாள் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 57.09 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், நேற்று மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள 17ஆவது வார்டுக்கு நடைபெற்ற மறுதேர்தலில் 73.55 விழுக்காடு வாக்குகள் பதிவானது.

மதுரை மாநகராட்சியில் மொத்த வாக்காளர்கள் 13, 43, 694 பேர். வாக்களித்தோர் 7, 25, 396 (53.99%). மதுரை மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் மொத்த வாக்காளர்கள் 1, 15, 323 பேர். வாக்களித்தோர் 82, 255 (71.33%) பேர். மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் மொத்த வாக்காளர்கள் 1, 13, 069 பேர். வாக்களித்தோர் 89, 799 பேர் (79.42%). ஆக, மாவட்டம் முழுவதும் மொத்த வாக்காளர்கள் 15, 72, 086 பேர். பதிவான வாக்குகள் வாக்களித்தோர் 8 97, 450 பேர் (57.09%).

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 9 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்குத் துவங்கியது.. மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளும், மேலூர், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி நகராட்சிகளில் 78 வார்டுகளும், பரவை, அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, சோழவந்தான், அ.வல்லாளபட்டி, தே.கல்லுப்பட்டி, பேரையூர் மற்றும் எழுமலை பேரூராட்சிகளில் 144 வார்டுகளும் என மொத்தம் 322 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது!

மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரை மண்டலம் 1இல் உள்ள 24 வார்டுகளில் பதிவான வாக்குகள் பாத்திமா கல்லூரியிலும், மண்டலம் 2 இல் உள்ள 25 வார்டுகள் வக்பு வாரிய கல்லூரியிலும், மண்டலம் 3இல் உள்ள 25 வார்டுகள் தமிழ்நாடு பாலிடெக்னிக் மகளிர் கல்லூரியிலும், மண்டலம் 4இல் உள்ள 26 வார்டுகள் தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆண்கள் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. 3 நகராட்சி மற்றும் 9 பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் எண்ணப்படுகின்றன.

பேரூராட்சி, நகராட்சிகளில் அஞ்சல் வாக்குகள் வார்டு வாரியாக பிரிக்கப்படுவதுடன் அவை எண்ணப்பட்டு, அறிவிக்கப்படும். பதிவான அஞ்சல் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அறிவிக்கப்படும். மதுரை மாநகராட்சியைப் பொறுத்தவரை அந்தந்த வார்டுகளுக்கான அஞ்சல் வாக்குகள் எண்ணத் தொடங்கி, 30 நிமிடங்களுக்குப் பின்னரே மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

மதுரை மாநகராட்சியில் பதிவான வாக்குகள் மேற்கண்ட வாக்கு எண்ணிக்கை மையங்களில் 12 அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு, அவற்றுள் 104 மேசைகளிலும், அதே போன்று நகராட்சிகளில் பதிவான வாக்குகள் மூன்று மையங்களில் 3 அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு 20 மேசைகளிலும், பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் 2 மையங்களில் 9 அரங்குகளாகப் பிரிக்கப்பட்டு 21 மேசைகளிலும் எண்ணப்படுகின்றன. மதுரை மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ள இந்த வாக்கு எண்ணிக்கையில் மொத்தம் 561 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு மாநகராட்சியைப் பொறுத்தவரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாகவும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைப் பொறுத்தவரை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலமாகவும் படிவம் 27இல் உடன் வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் பணிகள் கண்காணிக்கப்படும். வெற்றிபெற்ற வேட்பாளர்கள் குறித்த விபரங்களை தமிழ்நாடு தேர்தல் ஆணைய இணைய தளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *