• Thu. Dec 12th, 2024

மதுரை மேயராக இந்திராணி பதவியேற்பு

மதுரை மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த இந்திராணி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.
மதுரை மாநகராட்சி மேயர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்ட அரங்கில் நடைபெற்ற தேர்தலுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையருமான கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

மேயர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 50 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் இந்திராணி வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் மாநகராட்சி மேயராக இந்திராணி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நடந்த பதவியேற்பு விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மக்களவை உறுப்பினர் சுந்தரேசன் ஆகியோர் வெள்ளி செங்கோல் வழங்கி மேயர் இருக்கையில் இந்திராணியை அமர வைத்தனர்.

மேயராக பதவி ஏற்றுக்கொண்ட இந்திராணி செய்தியாளர்களிடம் கூறும்போது, மதுரை மாநகராட்சியின் வளர்ச்சிக்கு நேர்மையாக பாடுபடுவேன் என்றும் வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன் என்றும் கூறினார்.