


விமானப் பயணத்தின்போது ஜப்பானிய பயணி ஒருவர் மீது இந்தியப் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியிலிருந்து பாங்காக்கிற்கு கடந்த புதன்கிழமை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இந்த விரும்பத்தகாத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பந்தப்பட்ட ஜப்பானிய பயணி ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஆவார். அவர் மீது சிறுநீர் கழித்த இந்தியப் பயணியின் ஒழுங்கற்ற நடத்தை குறித்து விமானக் குழுவினர் உடனடியாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர் என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

ஜப்பானிய பயணி மீது சிறுநீர் பட்டவுடன், விமான ஊழியர்கள் உடனடியாக சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், அந்த இந்தியப் பயணியை எச்சரித்துள்ளனர். மேலும், பாங்காக் அதிகாரிகளிடம் புகார் அளிப்பதற்குத் தேவையான உதவிகளையும் வழங்கியுள்ளதாக நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இந்த ஒழுங்கீனமான செயலில் ஈடுபட்ட பயணி மீது நிலையான சுயேச்சைக் குழு மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த, 2022 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது, மும்பையைச் சேர்ந்த பயணி ஒருவர் 72 வயது மூதாட்டி மீது சிறுநீர் கழித்ததற்காக கைது செய்யப்பட்டு, அவர் பணிபுரிந்த நிறுவனத்திலிருந்து பணி நீக்கமும் செய்யப்பட்டார். இந்த தொடர்ச்சியான சம்பவங்கள் விமானப் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

