


தேடுபொறி துறையின் முன்னணி நிறுவனமான கூகுள், மீண்டும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்த முறை, ஆண்ட்ராய்டு, பிக்சல் மற்றும் குரோம் குழுக்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிநீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் இந்தப் பணி நீக்க செய்தியை ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது செயல்பாடுகளை எளிமைப்படுத்துவதற்கும், செயற்கை நுண்ணறிவு போன்ற விரைவாக வளரக்கூடிய துறைகளில் முதலீடுகளை முன்னிலைப்படுத்துவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தொழில்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தத் தீர்மானம் தொழில்துறையில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமேசான், மெட்டா போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலையில், செலவுகளை குறைக்கும் நோக்கில் கூகுள் தற்போது பணிநீக்கங்களை மேற்கொண்டு வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மற்றொரு பக்கம், உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள், ஏஐ திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படும் நிலையும், கூகுளை இந்த கடுமையான முடிவை எடுக்கச் செய்துள்ளன. இதனால், பல்வேறு குழுக்களில் பணியாற்றிய ஊழியர்கள் பாதிக்கப்படுவதுடன், தொழில்துறையில் இதன் தாக்கமும் பெரிதாகவே காணப்படுகிறது.
இந்த முறை கூகுள் பணிநீக்கங்கள், முதன்மையாக இயங்குதளங்கள் மற்றும் சாதனங்கள் பிரிவைப் பாதித்தன. இதில் ஆண்ட்ராய்டு, பிக்சல், குரோம், நெஃப்டோ மற்றும் ஃபிட்பிட் போன்ற வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்புகளும் அடங்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறுவனம் தன்னார்வ வெளியேறும் திட்டத்தை அறிவித்தது. அதாவது, தானாக முன்வந்து வேலையை விட்டு விலகுவதற்கான வாய்ப்பை அது வழங்கியது. இப்போது, பணிநீக்கம் தொடர்பாக ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் 60 நாட்களுக்குப் பிறகு பணியில் இருட்ந்து விலகுவார்கள் எனக் கூறப்படுகிறது.
கூகுள் பணிநீக்கங்களுக்கான முக்கிய காரணங்கள்:

எதிர்கால வளர்ச்சிக்கு ஏஐ உள்கட்டமைப்பு முக்கியமானது என்பதால் கூகுள் தனது பணியாட்களை தொடர்ந்து குறைத்து வருகிறது.
பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொண்டு, முடிந்தவரை செலவுகளைக் குறைக்க முயற்சிக்கிறது.
மறுசீரமைப்பு மூலம் அதன் திறன்களை அதிகரிக்க குழு நம்புகிறது.
அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களின் கடுமையான போட்டியை எதிர்கொண்டதால், பயனர் தேவைகளைப் பூர்த்தி செய்ய விரைவாக பதிலளிக்க சந்தையில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனம் அதன் சர்வதேச ஊழியர்களில் தோராயமாக 6 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. அதன் பின்னர் மேலும் சில வேலை இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும், கூகுள் நிறுவனத்தின் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை சுமார் 1,80,000 ஆக உள்ளது. கூகிள் தனது தளங்கள் மற்றும் சாதனங்கள் பிரிவில் உள்ள பல உயர்மட்ட குழுக்களை இந்த பணிநீக்கங்களின் மூலம் குறிவைத்துள்ளது. சரியான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை என்றாலும், நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

