• Sun. Feb 9th, 2025

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

ByIyamadurai

Feb 1, 2025

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றி பெற்றிருந்தன.

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஷிவம் துபே இருவரும் தலா 53 ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சாகிப் மக்மூத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைத் தொடர்ந்து 182 ரன்களை எடுத்தார் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பென் டக்கெட் 39 ரன்களிலும், பில் சால்ட் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களைத் தொடர்ந்து ஆடிய கேப்டன் பட்லர் 2 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் ஆடிய ஹாரி புரூக் அதிரடியாக 51 ரன்களில் வெளியேறினார்.

இவர்களையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஹாரி புரூக் 51 ரன்களை எடுத்தார். இந்திய அணியில் ரவி பிஸ்னோய் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.