மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கோலாலம்பூரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில், இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய ஜூனியர் மகளிர் அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியில் வாகை சூடியுள்ள நம் இந்திய இளம் வீராங்கனைகளுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். தொடர்ந்து 2வது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ள நம் இளம் வீராங்கனைப் படை, இன்னும் பல வெற்றிகளைக் குவித்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.