புரட்டாசி என்றாலே பெருமாளுக்கு உகந்த மாதமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று திருப்பதி உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதுரை டிவிஎஸ் நகரில் உள்ள 65 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவிலில் இன்று ராமர், கள்ளழகர் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.

டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள அனைத்து வீதிகளிலும் வீதி உலா சென்றபோது, ஒவ்வொரு வீடுகளிலும் பெண்கள் வாசலில் மாக்கோலம் இட்டு, தங்கள் வீட்டு வாசலில் கள்ளழகராக வந்த ராமபிரானை மனமுருக சேவித்து பிரார்த்தனை செய்தனர்.
பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் காட்சி அளித்து கள்ளழகராக வீதி உலா வந்த கோதண்டராமர், மீண்டும் தனது இருப்பிடமான கோவிலுக்கு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, கோவில் சார்பாக பக்தர்களுக்கு ஜடாரி மரியாதை, தீர்த்தம் மற்றும் புளியோதரை உள்ளிட்ட பிரசாதங்களும் மலர்களும் வழங்கப்பட்டன.




