

மதுரையில் இனி வீடுகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என்ற மாநகராட்சியின் தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெரும்பாலும் நமது வீடுகளில் நாய், பூனை போன்ற உயிரினங்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறோம். அதுவும் வெளிநாடுகளில் பாம்பு, புலி உள்ளிட்ட ஆபத்தான உயிரினங்களைக்கூட வீட்டில் வைத்து வளர்த்து வருகின்றனர். பலர், மனிதர்களைவிட விலங்குகளே பெட்டர் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். இதனால், செல்லப்பிராணிகளோடு அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர். இந்நிலையில் தான், செல்லப்பிராணிகள் வளர்ப்போருக்கு தற்போது ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, வீடுகளில் வளர்க்கப்படும் பறவை, விலங்குகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆம், மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தான் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க இனி கட்டணம் விதிக்கப்படும் என தீர்மானம் போடப்பட்டுள்ளது. அந்த வகையில், வீடுகளில் பறவைகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளர்த்தால், அதற்கு இனி கட்டணம் செலுத்த வேண்டும் என தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில், மாடு வளர்க்க ரூ.500 வசூலிக்கப்படும் என்றும், குதிரை வளர்க்க 750 ரூபாயும், ஆடு வளர்க்க 150 ரூபாயும், பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செல்லப்பிராணிகளான நாய், பூனை வளர்க்க ரூ.750 செலுத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய விதிமுறைகள் எப்போது முதல் அமலுக்கு வரும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த தீர்மானத்திற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே, பல்வேறு வரிகள் செலுத்தி வருவதால், அவதிப்பட்டு வருகிறோம். தற்போது, இந்த கட்டணம் தங்களுக்கு மேலும் சுமையை அதிகரிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இந்த தீர்மானத்தை மாநகராட்சி நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

