• Tue. Apr 23rd, 2024

ராமஜெயம் படுகொலை வழக்கில் முக்கிய தகவல் சிக்கியது

ByA.Tamilselvan

Jan 20, 2023

ராமஜெயம் படுகொலை வழக்கில் 2வது நாளாக 5 ரவுடிகளிடம் உண்மையை கண்டறியும் சோதனை நேற்று நடந்தது இதில் முக்கிய தகவல் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் படுகொலையில், 2வது நாளாக 5 ரவுடிகளிடம் உண்மையை கண்டறியும் சோதனை நேற்று நடந்தது. திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் 29 ம் தேதி வீட்டின் அருகே காலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை திருச்சி போலீசார், சிபிசிஐடி போலீசார், சிபிஐ உள்பட பல்வேறு அமைப்பினர் விசாரித்தும், கடைசி வரை ராமஜெயத்தை யார் கொலை செய்தனர் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும், தடயங்கள் மற்றும் ஆதாரங்கள் சிக்கவில்லை. இதற்கிடையே ரவிச்சந்திரன் என்பவர் தனது அண்ணன் ராமஜெயம் படுகொலை நடந்து 10 ஆண்டுகள் கடந்தும், சிபிஐ உள்பட எந்த அமைப்பும் இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், மாநில அரசு இந்த வழக்கு விசாரணையை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன், சிறப்பு விசாரணை அதிகாரியாக எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் 40 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இறுதியாக உண்மை கண்டறியும் சோதனை ஒன்றே உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க தீர்வு என முடிவுக்கு வந்தனர். அதன்படி மத்திய தடயவியல் துறை நிபுணர் மோசஸ் தலைமையிலான குழுவினர், சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று முதல் 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனையை தொடங்கினர். முதல் நாள் பிரபல ரவுடிகளான திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், திணேஷ், சீர்காழி சத்யா ஆகியோருக்கு சோதனை நடத்தப்பட்டது.
இரண்டாம் நாளான நேற்று பிரபல ரவுடிகளான சீர்காழி சத்தியா(எ) சத்யராஜ், செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 5 பேரிடம் தனித்தனியாக உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இது வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முதல் நாள் சோதனையின் போது சீர்காழி சத்யா(எ) சத்யராஜ் பல்வேறு தகவல்கள் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரவுடி சீர்காழி சத்யாவிடம் 2வது முறையாக நேற்றும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் அளித்த பதில் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 4 ரவுடிகளிடம் இன்று காலை சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனைகளின் முடிவில் கொலை வழக்கில் மர்ம தகவல்கள் வெளி வரலாம் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *