2001 – 2002 ம் கல்வியாண்டு முதல் தற்போது வரை பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியுள்ளது. 2001- 2002ம் கல்வியாண்டிற்கு பிறகு படித்த மாணவர்கள் 3 வது செமஸ்டர் தொடங்கி அரியர் வைத்திருந்தால், நடைபெறவுள்ள செம்ஸ்டர் தேர்வில் கலந்து கொள்ளலாம் என சிறப்பு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.
அதன்படி, மாணவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் சேர்த்து 5000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும். அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் www.coe1.annauniv.edu என்ற இணையதளத்தில் நவம்பர் 24 முதல் டிசம்பர் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வுக்கான மையங்கள் சென்னை லயோலா இன்ஜினீயரிங் கல்லூரி, விழுப்புரம் இன்ஜினீயரிங் கல்லூரி, ஆரணி இன்ஜினீயரிங் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, கோவை அண்ணா பல்கலைக்கழக கிளை, ஈரோடு அரசு பொறியியல் கல்லூரி, திருச்சி இன்ஜினீயரிங் கல்லூரி, மதுரை அண்ணா பல்கலைக்கழக கிளை, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக கிளை உள்ளிட்ட இடங்களில் உள்ளது. மாணவர்கள் இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.