• Fri. Apr 19th, 2024

பாதை மாறி போனால் ஊரு வந்து சேராது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பெரியகுளத்தில் பேச்சு.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தலைமையில், அந்த மாவட்டத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் இடையே நடைபெறும் உட்கட்சி பூசலால் நிர்வாகிகள் மாறி மாறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் நாள்தோறும் தனித்தனியே சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென சென்னை கிளம்பி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென இன்று பெரியகுளம் வந்தார். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி முன்னாள் எம்எல்ஏ சுப்புரத்தினம் தலைமையில் ரெட்டியார் சத்திரம் ஒன்றிய செயலாளர் பசும்பொன், குள்ளிசெட்டிபட்டி பிரசிடெண்ட் வைகை பாலன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, நிலக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் ஆகியோர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட வேடசந்தூர் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதி, நகர ஒன்றிய பதவிகளில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுடன் உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் கலந்து கொண்டுள்ளார்.
நிகழ்ச்சியில், சுப்புரத்தினம், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் உரையாற்றிய பின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உரையாற்றினார். அவர் தனது உரையில் கூறுகையில், எந்த நோக்கத்திற்காக அதிமுக என்ற ஒரு பெரும் கழகத்தை, கட்சியை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா துவக்கினார்களோ அந்த கழகத்தை அவர்கள் வழி காட்டிய வழியில் நன்றாக நடத்திச் செல்ல வேண்டும் என்பதற்காக மிகுந்த ஆர்வத்தோடு கழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று நாம் அனைவரும் நினைக்கின்ற இந்த நேரத்தில் அசாதாரணமான சூழல் நிலவி வருகின்றது. இது ஏன் ஏற்பட்டது, எதனால் ஏற்பட்டது என்று நாம் அனைவருக்கும் தெரியும். அதிமுக கழகத்தை உருவாக்கிய எம். ஜி.ஆர். 10 ஆண்டு காலங்களும் அதன் பின்னர் ஜெயலலிதா 16 ஆண்டுகளும் என 26 ஆண்டுகள் நல்லாட்சி நடத்திய நிலையில் தமிழகத்தில் 30 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சி கொடுத்த ஒரே கட்சி அதிமுக தான். எனவே இந்த கட்சியில் சாதாரண தொண்டனாக இருப்பதே பெருமை தான் இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி பொதுக்குழு எப்படி நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். பொதுக்குழு என்றால் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் தற்காலிக அவை தலைவரை முன்மொழிந்து அதனை எடப்பாடி பழனிச்சாமி வழிமொழிய வேண்டும். ஆனால் நான் மைக் பிடித்து பேச ஆரம்பித்த பொழுது கூச்சல் குழப்பம் அட்டூழியம் அவர்கள் ரவுடி கேடிகளை வைத்துக்கொண்டு கலவரம் செய்ய ஆரம்பித்தனர். இதில் சி.வி சண்முகம் உடனே எழுந்து வந்து நாங்கள் ஏற்கனவே நிகழ்ச்சி நிரல் படி ஏற்படுத்தி வைத்திருந்த 23 தீர்மானங்களை 23 தீர்மானங்களும் ரத்து என்று சிவி. சண்முகம் அறிவித்துவிட்டு சென்றார். எந்த விவாதமும் இல்லை, என்னிடமும் கேட்கவில்லை. பொருளாளர் என்ற முறையில் நான் கணக்கு வழக்கு தாக்கல் செய்ய வேண்டும், அதனையும் என்னை தாக்கல் செய்ய விட வில்லை. இதுவரையில் அம்மா அவர்கள் எனக்கு பொறுப்பு கொடுத்து அந்த பொறுப்பை திருப்பி என்னிடமிருந்து பெற்றுக் கொண்டதாக சரித்திரமே கிடையாது. அந்த அளவிற்கு நான் அவர்களுக்கு விசுவாசமாக இருந்துள்ளேன். எனவே இந்த கூட்டத்தில் கலவரம் ஏற்பட்டு விடும் என்று நான் அருகில் அமர்ந்துள்ள வைத்தியலிங்கம் அவர்களிடம் இந்த பொதுக்குழுவில் இல்லாதவர்கள் ஏராளமானோர் இருப்பதால் நாம் சென்று விடலாம் என்று கூறி அமைதியாக சென்று விட்டோம். பின்னர் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் இரவு முழுவதும் ரவுடிகளை வைத்துக்கொண்டு மது அருந்தி கேலிக்கூத்துகளில் ஈடுபட்டு வந்திருந்தனர். நாங்கள் அந்த பொதுக்குழுவிற்கு செல்ல வேண்டாம் எனவே தலைமைக் கழகம் சென்று அமர்ந்து விடலாம் என்று சென்ற நிலையில் நிராயுதபாணியாக சென்ற எங்களை தாக்க ஆரம்பித்தது அவர்கள்தான். எனவே இந்த இரு மாபெரும் தலைவர்கள் ஆரம்பித்து வைத்த இந்த இயக்கத்தில் உள்ள தொண்டர்கள் நம்பக்கமும் குண்டர்கள் அவர்கள் பக்கமும் உள்ளனர். பாதை மாறி போனால் ஊரு வந்து சேராது என ஏற்கனவே நாம் சேவல் என்று இரண்டு அணிகளாக இருந்த பொழுது முதலில் மக்கள் கொடுத்த அடியை தான் மீண்டும் நமக்கு கொடுப்பார்கள் என்பதால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமே ஒழிய இதில் பிடிவாதம் காட்டக்கூடாது என்றும் நான் முதலமைச்சராக வேண்டும் என்ற நிலையில் கூறவில்லை என்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றி ஆரம்பித்து கொடுத்த இந்த இயக்கத்தை சிறப்பாக வழி நடத்தி செல்ல வேண்டும் என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *