தமிழகம் முழுவதும் பணியாற்றும் 2,650 ஆஷா பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஒவ்வொரு 1,000 பேர் கொண்ட மக்கள்தொகைக்கும் ஒரு ஆஷா பணியாளர் எனப்படும் சமூக சுகாதார ஆர்வலர் இருக்க வேண்டும். இவர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு முதன்மை சுகாதார உதவிகளைச் செய்வதிலும், குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்குதல், இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள், மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிறப்பு, இறப்பு குறித்து பதிவு செய்தலிலும் ஆஷா பணியாளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.
இவர்களின் பணிநிரந்தரம், ரூ.18,000 மாத ஊதியம், ரூ.25,000 கொரோனா நிவாரணம், அடையாள அட்டை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆஷா பணியாளர் சங்கம் சார்பில் சென்னையில் நேற்று கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
பொதுச் செயலர் வகிதா நிஜாம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், கலந்துகொண்டு பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் பணிபுரியும் 2,650 ஆஷா பணியாளர்களுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும். கிராமப்புறங்களில் ஆஷா பணியாளர்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய சுகாதாரத் திட்டத்தின்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு பகுதிநேரப் பணியாளர்களாக நியமிக்கப்பட்ட ஆஷா பணியாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. காசநோய், கர்ப்பிணிகளைக் கண்டறிந்து பதிவு செய்பவர்களுக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, 42 வயதுக்கு உட்பட்ட, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு இரண்டு ஆண்டு பயிற்சிகொடுத்து, ஆண்டுக்கு 60 பேரை நிரந்தர செவிலியராக நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.