• Wed. Apr 24th, 2024

இவை எல்லாவற்றையும் அழித்தமைக்காக வாழ்த்துகள் மோடிஜி: கபில் சிபல்…

Byமதி

Oct 17, 2021

உலக பட்டினிக் குறியீட்டில் இந்தியா 101-வது இடத்துக்குப் பின்தங்கியது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பிரதமர் மோடியைக் கிண்டல் செய்துள்ளார்.

உலகளவில் பட்டினிச் சாவு, சரிவிகித சத்துணவு மக்களுக்குக் கிடைப்பது ஆகியவற்றைக் கண்டறிந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஐயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் அமைப்பு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ப் ஆகிய அமைப்பும் சேர்ந்து தயாரித்த அறிக்கையில், இ்ந்தியாவில் பட்டினியின் அளவு அபாயக்கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு, 5-வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவுக் குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5-வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினிக் குறியீடு கணக்கிடப்படுகிறது.

2021-ம் ஆண்டுக்கான உலக பட்டினிக் குறியீட்டில் 116 நாடுகளில் இந்தியா 101-வது இடத்துக்குச் சரிந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு 107 நாடுகளுக்கான பட்டியலில், 94-வது இடத்தில் இருந்தது.
மேலும், கடந்த 1998-2002ஆம் ஆண்டு இந்தியாவில் 5 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் சத்துணவுக் குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல் சதவீதம் 17.1 ஆக இருந்த நிலையில் 2016 முதல் 2020-ம் ஆண்டில் இது 17.3 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் 76-வது இடம், வங்கதேசம் 76, மியான்மர் 71, பாகிஸ்தான் 92 ஆகிய இடங்களில் உள்ளன. அதேசமயம், சீனா, பிரேசில், குவைத் உள்ளிட்ட 18 நாடுகளில் பட்டினிக் குறியீடு என்பது 5-க்கும் குறைவாகவே இருக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி.யும் மூத்த தலைவருமான கபில் சிபல் ட்விட்டரில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் செய்த டிவிட்டில்,

“இவை எல்லாவற்றையும் அழித்தமைக்காக மோடி ஜிக்கு வாழ்த்துகள்.
1.வறுமை
2.பட்டினி

  1. இந்தியாவை சூப்பர் பவர் நாடாக்கியது
    4.நாட்டை டிஜிட்டல் பொருளாதாரமாக்கியது
  2. இன்னும் அதிகமாக….
    உலக பட்டினிக் குறியீடு
    2020-ம் ஆண்டில் இந்தியா தரவரிசையில் 94-வது இடம் 2021-ம் ஆண்டில் இந்தியா தரவரிசையில் 101-வது இடம்
    வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளத்தைவிடப் பின்தங்கி இந்தியா இருக்கிறது” என்று கபில் சிபல் விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *