• Wed. Sep 11th, 2024

அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது…

Byமதி

Oct 17, 2021

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு மிரட்டல் விடுத்து, அவதூறு பரப்பிய வழக்கில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நவல்பட்டு விஜியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் பூலாங்குடி காலனி பாரத் நகரைச் சேர்ந்தவர் நவல்பட்டு விஜி (எ) விஜயகுமார். இவர் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தீவிர ஆதரவாளர். கடந்த 2018-ல் திருவெறும்பூர் ஒன்றிய திமுக செயலாளராக இருந்த நவல்பட்டு விஜிக்கும், அத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த அமைச்சர் அன்பில் மகேஷ்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து ஒன்றியச் செயலாளர் பதவியில் இருந்து நவல்பட்டு விஜி விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக அன்பில் மகேஷ் நியமிக்கப்பட்டார். அதன் பின்பு, அன்பில் மகேஷ்க்கு எதிராக விஜி தனது முகநூலில் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்ததை அடுத்து, அவர் ஜனவரி மாதம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் முகநூலில் பதிவு செய்ததாக விஜி மீது காவல் நிலையத்திலும், சைபர் கிரைம் பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நவல்பட்டு விஜியை நேற்று மாலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *