அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். மூலவர் சுப்பிரமணியர், உற்சவர் சண்முகர் சந்நிதியில் சுவாமி தரிசனம் செய்த அவர், வள்ளிக்குகைக்குச் சென்று 5அடி உயரமுள்ள வெண்கலத்தினாலான வேலினை திருக்கோயிலுக்குக் காணிக்கையாக வழங்கினார். சுவாமி சந்நிதிகளில் கண்களை மூடி சுமார் 20 நிமிடம் வேண்டிக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் அ.தி.மு.கவில்தான் இருக்கிறேன்.
எங்கள் கட்சி அ.தி.மு.கதான். தொண்டர்கள்தான் தலைவர்களை உருவாக்குகிறார்கள். தொண்டர்களால் ஆனதுதான் அ.தி.மு.க. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியின் சட்டம், ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் இருந்தது. காவல் துறையினருக்கு உரிய அங்கீகாரமும், சுதந்திரமும், மரியாதையும் இருந்தது. காவல் நிலையங்களில் அ.தி.மு.கவினர் தலையிட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கட்சியினர் காவல் நிலைய விவகாரங்களில் தலையிட மாட்டார்கள். அந்தளவிற்கு காவல்துறைக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில், அந்தக் கட்சியின் கரைவேட்டி கட்டியவர்கள்தான் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். சாலையோரம் சிறிய கடை வைத்து பிழைப்பு நடத்தி வருபவர்களிடம்கூட, அந்தக் கட்சிக்காரர்கள் மாதந்தோறும் மாமூல் பணத்தை அடாவடியாக வசூல் செய்து வருகிறார்கள். இதையெல்லாம் முதல்வர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடும்பத்தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையாகத் தருவதாகச் சொன்னார்கள். செய்யவில்லை.
தி.மு.க ஆட்சி என்றாலே மின்வெட்டுதான். தற்போதும் மின்வெட்டு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தி.மு.கவின் தற்போதைய ஓராண்டு ஆட்சியில் சொல்லிக் கொள்ளும்படியானது என எதுவுமில்லை. இந்த ஓராண்டிலும் இந்த ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்புதான் ஏற்பட்டுள்ளது. எனது அரசியல் பயணத்தை விரைவில் தொடர்வேன். நான் ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் ஆட்சி எப்படி இருந்ததோ, அதே ஆட்சியை வழங்குவேன்” என்றார்.