ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்ற தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பா.ஜ.க.வினர் நேற்று காலணியை வீசினர். இச்சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்நிலையில், மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர் சரவணன் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் வீட்டிற்கு நேரில் சென்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் சரவணன் பா.ஜ.க.வில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்தார். இதுதொடர்பாக டாக்டர் சரவணன் கூறியதாவது:
எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை. எனது மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன். நான் பா.ஜ.க. கட்சியில் தொடரவில்லை. பா.ஜ.க.வில் நான் தொடரப்போவதில்லை. இன்று காலை ராஜினாமா கடிதத்தைக் கொடுப்பேன். சுயமரியாதையுடன் இருக்க வேண்டும். திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. (திமுகவில் இணைவது) செய்தாலும் தப்பில்லை. திமுக தாய் வீடு தானே. 10-15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக என தெரிவித்தார். திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து கடந்த ஆண்டு விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். அவர் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.