இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்ற திரெளபதி முர்மு நான் ஜனாதிபதியானது ஜனநாயகத்தின் சக்தி என தனதுதுவக்க உரையில் பேசியுள்ளார்.
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரெளபதி முர்மு இன்று பதவியேற்றார். பதவியேற்ற பிறகு அவர் தனது முதல் உரையை ஆற்றினார். அவர் பேசியதாவது:- ஜனாதிபதியாக பதவியேற்றது பெருமை அளிக்கிறது. என்னை தேர்ந்தெடுத்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்துக்காக பணியாற்றுவேன். அடுத்த 25 ஆண்டுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். சாதாரண கவுன்சிலராக தொடங்கி ஜனாதிபதியாக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவமாகும். ஏழை வீட்டில் பிறந்த மகளான நான் ஜனாதிபதி ஆக முடியும் என்பதுதான் ஜனநாயகத்தின் சக்தியாகும். என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவு கோலாக இருக்கும். பெண்கள், இளைஞர்களின் நலனில் தனி கவனம் செலுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.