• Thu. Mar 28th, 2024

தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தும் அதிமுக.. தேனியில் மட்டும் ஒத்திவைப்பு…

Byகாயத்ரி

Jul 25, 2022

மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டனம் தெரிவித்து அதிமுக சார்பாக தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஓபிஎஸ் சொந்த மாவட்டமான தேனியில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வீட்டு வரி உயர்வு முதல் மின் கட்டண உயர்வு வரை, தமிழக மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, வேலை வாய்ப்பின்மை, வருமான இழப்பு என்று சிக்கி அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கும் தமிழக மக்கள், தற்போதுதான் மெல்ல மெல்ல தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனார்.மக்களைக் காப்பாற்றுவதற்காகவே அவதாரம் எடுத்த திராவிட மாடல் நாங்கள் தான் என்று தம்பட்டம் அடித்து, வாய்ச் சவடால் வீரர்களாகத் திரியும் விடியா திமுக அரசின் ஆட்சியாளர்கள், மக்களை வஞ்சிக்கும் செயல்களையே தொடர்ந்து செய்து வருகிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார்.

2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை விடியா திமுக அரசு தாக்கல் செய்யும்போது, வரியில்லா பட்ஜெட் அளித்திருக்கிறோம் என்று மார்தட்டிவிட்டு, துறை தோறும் ஏதாவது ஒரு விதத்தில் வரி உயர்வு, கட்டண உயர்வு என்று அறிவித்து, மக்களை ஏமாற்றி வருகிறார்கள் என கூறியுள்ளார்.மேலும் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கண்டிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் (25.07.2022) இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவிந்திருந்தார். இந்தநிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள தேனி, தஞ்சாவூர், திருச்சி, உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மட்டும் இன்று போராட்டம் நடைபெறவில்லை, இந்த மாவட்டங்களில் உள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்களாக உள்ளனர். இதையடுத்து இந்த மாவட்டங்களுக்கு மட்டும் அதிமுக மூத்த நிர்வாகிகளை அதிமுக தலைமை நியமித்துள்ளது. எனவே இந்த இடங்களில் நாளை போராட்டம் நடைபெறும் என அதிமுக தரப்பு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *