


கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம்-600க்கும் மேற்பட்ட OE மில்கள் மூடப்பட்டன.
உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு 32 கோடி ரூபாய் வருவாய் இழப்பு….


கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளரிடம் கூலி உயர்வு கோரியும்,விலைவாசி உயர்வுக்கு ஏற்ற வகையில், கூலி உயர்வு வேண்டுமென வலியுறுத்தி ஐந்து நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் கழிவு பஞ்சுகளின் விலையை கட்டுப்படுத்த கோரியும், சோலார் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய கோரியும், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மின்சார வாரியம் அமல்படுத்த கோரியும், வருடம் ஒருமுறை மின்கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம் அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், கோவை திருப்பூர் மாவட்டங்களில் 600க்கும் மேற்பட்ட OE மில்கள்,சலவை மற்றும் சிபி மில்கள் இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிவாவி, காரணம்பேட்டை, சாமலாபுரம், பல்லடம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் OR மில்கள் மூடப்பட்டுள்ளன.
இன்று ஒரு நாள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தால் சுமார் 32 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் மில்லில் பணிபுரியும் தொழிலாளர்கள் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று வேலை இழந்துள்ளதாகவும், அடுத்த கட்ட போராட்டம் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் எனவும் மறுசுழற்சி ஜவுளிக் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

