


“வாழை” திரைப்படத்தில் வருவது போல பல்லடம் அருகே பச்சா கவுண்டம்பாளையத்தில் இருந்து வடுகபாளையம் நோக்கி தென்னை நர் தொழிற்சாலைக்கு மரத்தூள் மற்றும் வட மாநிலத் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்துச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்தில் சிக்கினார்.
ஏழு குழந்தைகள் உட்பட 21 பேர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாகவுண்டம் பாளையத்தில் இருந்து வஞ்சிபுரம் வழியாக வடுக பாளையத்தில் இயங்கி வரும் தனியார் தென்னை நார் தொழிற்சாலையில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்களை ஏற்றுக்கொண்டு சின்னு என்பவர் டிராக்டரில் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக வஞ்சிபுரம் அருகே டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது வாய்க்கால் பகுதியில் டிராக்டரின் பின்பக்க சக்கரம் இறங்கியதால் டிராக்டரின் டைலர் தலைக்குப்புற கவிழ்ந்தது.
டிராக்டரில் மரத்தூள்கள் மீது அமர்ந்திருந்த ஏழு குழந்தைகள் உட்பட 21 வட மாநில தொழிலாளர்கள் விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த குழந்தைகள் மற்றும் வட மாநில தொழிலாளர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த வட மாநில தொழிலாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒரு குழந்தை மற்றும் ஒரு வட மாநில தொழிலாளர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மரத்தூள் ஏற்றி வந்த டிராக்டரில் வட மாநில தொழிலாளர்கள் அமர்ந்து வந்ததும், தொழிற்சாலை சார்பில் தொழிலாளர்களுக்கு முறையான வாகன வசதி ஏற்படுத்தி தராததும், டிராக்டரின் பின்பக்கம் வாய்க்காலில் இறங்கியதும் விபத்துக்கான முதல் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து சுல்தான்பேட்டை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

