பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுக்காத ஆளுநர் எல்லோரையும் எப்படி சமமாக நடத்துவார், ஆளுநர் பதவியேற்பு ஒரு சடங்காகவே முடிந்துள்ளது என விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி பேட்டி.
மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள தனியார் மகாலில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் பணியாளர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்தில் விளவங்கோடு காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கலந்து கொண்டார்.
முன்னதாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில்,
ஊரக உள்ளாட்சித்தேர்தலில் திமுகவுடனும், பிற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை செய்கிறோம். எந்தெந்த இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பலமாக, மக்களுக்கு நன்கு அறிந்தவர்களாக உள்ளனர் என்பதை அறிந்து அங்குள்ள திமுக மாவட்டச்செயலாளர்கள் மற்றும் திமுக அமைச்சர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும்.
இந்த தேர்தல் வரும் நகராட்சி மாநகராட்சி தேர்தல்களில் முன்னுதாரணமாக இருப்பதோடு, அதிலும் மிகப்பெரிய வெற்றியை தரும்.
ஆளுநர் பதவியேற்பு விழாவுக்கு எங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை. ஆளுநர் தரப்பில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களான எங்களுக்கு அழைப்பு வரவில்லை.
அழைப்பு கொடுத்து பின்பு விழாவுக்கு செல்வதும், செல்லாததும் குறித்து முடிவெடுத்திருக்கலாம்.
ஆனால் விழாவுக்கு அழைப்பே வரவில்லை.
ஆளுநர் பற்றிய பல்வேறு ஐயங்கள் கேள்விகள் எங்களுக்கு உள்ளது.பதவியேற்பு விழாவிற்கே அழைப்பு கொடுக்காத ஆளுநர் எப்படி எல்லோரையும் சமமாக நடத்துவார்.
பல்வேறு கட்சிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் ஆளுநர் பதவியேற்புக்கு அழைக்கவில்லை. ஆளுநர் பதவியேற்பு ஒரு சடங்காக தான் நடந்து முடிந்துள்ளது என தெரிவித்தார்.