• Fri. Jan 17th, 2025

சமையல் எண்ணெய் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி

Byவிஷா

Dec 6, 2024

இந்தியாவில் பல சமையல் எண்ணெய்கள் தற்போது 150ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதத்தில் 40 ரூபாய் வரை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியாவில் சில உணவு பொருட்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.. இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியும் விதிக்கப்படுகின்றன. மத்திய அரசு விதித்து வரும் இந்த வரி பொருட்களுக்கு ஏற்ப வித்தியாசப்படும்… இப்படி இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சமையல் எண்ணெய்களும் அடங்கும்.
இந்திய சந்தைகளில் இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சமையல் எண்ணெயின் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி மூலமாக தான் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்தில் உள்ளிட்ட நாடுகளிலிருந்துதான் நமக்கு அதிகளவில் பாமாயில் இறக்குமதியாகின்றன.. தற்போது எண்ணெயின் விலை அதிக அளவில் உயர்ந்து காணப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் 110 ரூபாய்க்கு விற்கப்பட்டது..
மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்திய காரணத்தினால், தீபாவளி பண்டிகை நேரத்தில் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்ந்தது… பிறகு தீபாவளி முடிந்ததுமே விலை குறைந்து விடும் என்று நம்பப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், லிட்டருக்கு மேலும் 20 ரூபாய் எகிறியது.
இதன்காரணமாக, பல்வேறு சமையல் எண்ணெய்கள் தற்போது ஒரு லிட்டர் 150-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த 2 மாதத்தில் மட்டும் சமையல் எண்ணெய் லிட்டருக்கு 40 ரூபாய் வரை உயர்ந்திருப்பது, பொதுமக்களை கடும் அதிருப்திக்கும், அதிர்ச்சிக்கும் ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட எண்ணெய் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சொல்லும்போது, “மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வு, மற்றும் சில நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போர்கள், மலேசியாவிலிருந்து அதிக அளவில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களை இந்தியா இறக்குமதி செய்வது உள்ளிட்ட காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.. இந்த விலை உயர்வு மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால், இப்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை” என்கிறார்கள்.