

மதுரையில் உள்ள கடவு காத்த அய்யனார் கோயிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், ஆண்டார் கொட்டாரம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடவு காத்த அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் உள்ள பகுதியில் பட்டியலின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் கடவு காத்த அய்யனார் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும் மாசி மாத திருவிழாவின் போதும் பட்டியலின சமூகத்தை சேர்ந்த மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். பட்டியலின மக்கள் அனைவரும் இதுநாள் வரை கோயிலுக்கு வெளியில் நின்றுதான் சாமி கும்பிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேகா சுரேஸ் உயர்நீதிமன்ற கிளை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பட்டியலின மக்களை கடவு காத்த அய்யனார் கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபால் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்ய எவ்வித தடையும் விதிக்கக் கூடாது, அவ்வாறு உள்ளே வந்து சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டால் உடனடியாக காவல் துறையை அணுகி உரிய பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தார்.

