

மதுரை – சிங்கப்பூர் விமான போக்குவரத்தை நிறுத்தக்கூடாது ஒன்றிய அமைச்சருக்கு விருதுநகர் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான பயணிகள் போக்குவரத்து கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதலில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் வாராந்திர போக்குவரத்தாக தொடங்கப்பட்ட இது பயணிகள் வரவேற்பு தேவை அதிகரித்ததால் தினசரி விமான சேவையாக மாற்றப்பட்டது.
மதுரையில் இருந்து தினமும் இரவு 11.30 மணிக்கு சிங்கப்பூர் சென்று வந்தது இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்து வந்தது 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் – ஜூன் (காலாண்டில்) மாதங்களில் மட்டும் 27 ஆயிரத்து 336 பயணிகள் சென்று வந்தனர்.
இந்த நிலையில் ‘கோவிட்-19’ தொற்று நோய் காரணமாக இந்த விமான சேவை 2022 ஏப்ரல் முதல், வாராந்திர சேவையாக மாறியது. மேலும் பகல் நேர பயணமாகவும் (மதியம் 1:30 மணி) மாற்றப்பட்டது. கட்டணங்களும் அதிகமானது. இது போன்ற காரணங்களால் தான் பயணிகளின் பயன்பாடு குறைந்தது.

இந்த நிலையில் 2025 ஏப்ரல் மாதம் முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான போக்குவரத்தை, மதுரை சிங்கப்பூர் விமான சேவையை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பதாக அறிவித்து இருப்பது வருத்தத்தக்கது.
மதுரை – சிங்கப்பூர் விமான போக்குவரத்து தென் மாவட்டங்களின் மக்களுக்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இந்த சேவை ஒரு முக்கியமானதாக அமைந்திருந்தது. சிங்கப்பூரின் தமிழ் மக்கள் தொகையில் கணிசமான மக்கள் மதுரையில் இருந்து வருகிறார்கள். இந்த விமான சேவை நிறுத்தப்பட்டால் தென்னிந்தியாவிற்கும், சிங்கப்பூருக்கும் இடையிலான நேரடி விமான தொடர்பு துண்டித்து விடும். மேலும் சமூகம் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே தாங்கள் (மாண்புமிகு சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஸ்ரீராம் மோகன் நாயுடு) உடனடியாக தலையிட்டு மதுரை சிங்கப்பூர் விமான சேவையை தொடர்ந்து இயக்க வேண்டும். அதுவும் வழக்கம் போல் மதுரையிலிருந்து இரவு 11 .30 மணிக்கு இந்த போக்குவரத்தை அமல்படுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழ் சமூகம் மட்டும் அல்லாது, தென்னிந்திய மக்களின் உறவுகளும், வணிக உறவுகளும் வளரும். எனவே முக்கியத்துவம் கருதி மதுரை சிங்கப்பூர் நேரடி விமான போக்குவரத்தை அதுவும் இரவு நேர பயணத்தை தினசரி சேவையாக தொடர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தை வலியுறுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மாணிக்கம் தாகூர் எம்.பி ஒன்றிய அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

