சென்னையில் மழை தொடர்பான உதவிகளுக்கு மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் நேற்று முதல் கனமழை பெய்து வரும் நிலையில், மழை தொடர்பான உதவிகளைப் பெறுவதற்கான தொலைபேசி எண்களை மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலானது இன்று இரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில், மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.