• Fri. Apr 18th, 2025

மாற்றுத்திறனாளிகள் சங்கம் தலைமைச்செயலகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு

Byவிஷா

Apr 12, 2025

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 22ஆம் தேதி முதல் தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன், பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆந்திரா மாநிலத்தைப் போல மாற்றுத்திறனாளிகளுடைய ஊனத்தின் தீவிரத்தைப் பொறுத்து தமிழகத்திலும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6000, ரூ.10,000, ரூ.15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறையாக தமிழகத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் வயதுவரம்பு தளர்வுக்குழு மூலம் உதவித்தொகை என்ற நிலைமையை நீக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் வேலை அட்டை வழங்குவதுடன், 100 நாட்களும் வேலையை முழுமையாக வழங்க உத்தரவாதமான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 50 சதவீத பணி என்ற அடிப்படையில் 4 மணி நேரம் என ஏற்கனவே இருந்துவந்த நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். 2 கிமீ தூரத்துக்கு மேல் செல்ல வேண்டிய பணியிடங்களுக்கு வாகன ஏற்பாடு, கழிப்பறை உள்ளிட்ட சட்டப்படியான மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்ற வசதிகள் செய்துதர வேண்டும்.
சமூகப்பாதுகாப்பு திட்டங்களில் 25 சதவீத அளவு கூடுதலாக வழங்க வேண்டும் என்ற ஊனமுற்றோர் உரிமைகள் சட்ட விதி அடிப்படையில் வேலை நாட்களை 125 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். 2024-25-ம் ஆண்டுக்கான ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. எனவே, ஏப்.22-ம் தேதி காலை 10 மணி முதல் சென்னை எழிலகத்தில் தொடங்கி கோரிக்கை நிறைவேறும் வரை தலைமைச் செயலகத்தை தொடர் முற்றுகையிட தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.