• Sat. Apr 20th, 2024

சசிகலாவின் ரூ.15 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

ByA.Tamilselvan

Jul 1, 2022
sasikala

சசிகலாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட சென்னை தியாகராயநகர், பத்மநாபா தெருவில் இருக்கக்கூடிய ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தின் சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கினர். இந்த சொத்தின் மதிப்பு ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில் முதற்கட்டமாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக சென்னை, கோவை மற்றும் புதுச்சேரியில் உள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கினர்.பின்னர் இரண்டாவது கட்டமாக, சசிகலா தரப்பினர் 2003-2005 ஆம் ஆண்டுகளில் வாங்கிய சொத்துக்களை வருமானவரித் துறையினர் முடக்கினர். சென்னை போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்களை வருமானத்துறையினர் முடக்கியிருந்தனர்.
மூன்றாவது கட்டமாக, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெயரில் சென்னைக்கு அருகே உள்ள சிறுதாவூர் நிலம் மற்றும் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் நிலம் என மொத்தம் சுமார் 1,100 ஏக்கர் நிலங்கள், பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ. 15 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை.சென்னை தி.நகர் பத்மநாபா தெருவில் உள்ள ஆஞ்சநேயர் பிரிண்டர்ஸ் நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சசிகலா பினாமி பெயரில் சொத்து வாங்கியதை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்ததையடுத்து சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *