புயல் இன்று மாலை கரையைக் கடக்க உள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களுக்க வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் ஃபெஞ்சல் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில், புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் 90 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் நீர் நிலைகளில் மிதமானது முதல் அதிக வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் இன்று நவம்பர் 30ம் தேதி இந்த மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழைக்காலங்களில் தேவையில்லாமல் நீர்நிலை பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.