திருவண்ணாமலையில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக பாறைகள் சரிந்து வீடுகளின் மீது விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய குழந்தை உள்பட 7 பேரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு பணியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன் தினம் முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலை உச்சியில் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து பாறை ஒன்று உருண்டு வந்தது.
சற்றும் எதிர்பாராமல் வேகமாக உருண்டு வந்த பாறை, வ. உ. சி. நகர் தெருவில் வீடுகளின் மீது விழுந்தது. இதனையடுத்து அங்கிருந்த வீடுகளில் இருந்த 7 பேர் சிக்கிக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் தேசிய பேரிடர் மீட்புப் படை மீட்புப் பணியை தொடங்கி உள்ளது.
வீட்டின் மீது விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்து விழுந்த வீடுகளில் உள்ளே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து முழு தகவல்கள் பாறையை அகற்றிய பிறகு தான் முழுமையான விவரம் தெரியவரும். முன்னதாக திருவண்ணாமலையில் பாறை சரிந்து விழுந்த பகுதியில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட எஸ்பியும் சம்பவ இடத்தில் நேரில் சென்று மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.